Sunday, 15 December 2019

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகிறது..! இரவு 10 மணிக்குப்பின் முடங்கும் அரசு பஸ்கள் இயக்கம்: பஸ் ஸ்டாப்புகளில் பலமணிநேரம் நிற்கும் அவலம்


சென்னையில் இரவு நேரங்களில் அரசு பஸ்கள் மிகவும் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலமணிநேரம் பஸ் ஸ்டாப்புகளில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரே வழித்தடத்தில் பஸ்கள் அணிவகுப்பதும், முறையாக கண்காணிப்படாததும் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தின் தலைநகராக சென்னை இருக்கிறது. இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த ஐடி நிறுவனங்கள்; கார், இருசக்கர வாகன ெதாழிற்சாலைகள்; ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் உள்ளன. இதேபோல் பிரபலமான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரிவதற்காகவும், படிப்பதற்காகவும் பல்வேறு தரப்பினரும் இங்கு தங்கியுள்ளனர். இவர்கள் தினசரி வீட்டில் இருந்து வேலை செய்யும் இடங்களுக்கு அரசு பஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கார், டூ வீலர், மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றில் பயணிக்கிறார்கள்


இதில் அரசு பஸ்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு இங்கு பயண கட்டணம் சற்று குறைவாக இருப்பதே காரணம். இதைக்கருத்தில் கொண்டு மாநகரப்போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில் தினசரி 3,300 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் இரவு நேரங்களில் செயல்படுகின்றன. இதற்காக எம்டிசி சார்பில் இரவு நேரங்களில் பஸ் சேவை வழங்கப்படுகிறது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் மிகுந்து காணப்படும் தரமணி, திருவான்மியூர், சிறுசேரி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, ஜிஎஸ்டி ரோடு உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே சென்னையிலிருந்து சம்மந்தப்பட்ட பஸ்ஸ்டாண்டுக்கு செல்வதற்கும், பிற ஊர்களில் இருந்து சென்னை வருவோரின் வசதிக்காகவும் மாநகரின் முக்கியப்பகுதிகளில் இருந்து எம்டிசி பஸ்கள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு இயக்கப்படுகின்றன.

இத்தகைய பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இரவு 10 மணி தாண்டி விட்டால் போதும், அதன்பின் பயணிகள் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அதன்பின் எந்த வழித்தடத்திலும் முறையாக அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. சில வழித்தடங்களில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாகவும் பஸ்கள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் ஆங்காங்குள்ள பஸ் ஸ்டாண்டுகளில் பலமணி நேரம் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வேலைக்கு செல்வோர் பாதிப்பை சந்திக்கிறார்கள். இதில் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

அதிகாரிகளின் அலட்சியத்தால், அவர்கள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கிருந்து நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோரும் பாதிக்கப்படுகிறார்கள்.
அதாவது குறிப்பிட்ட நேரத்தில் எம்டிசி பஸ் வராததால், அவர்கள் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் நீண்ட தூர பஸ்களை தவற விடும் நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதால், பலருக்கு பணம் இழப்பு ஏற்படுகிறது. இதேபோல் எக்மோர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்வோரும் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்படுவோர், ஆங்காங்குள்ள போக்குவரத்துத்துறை அலுவலகங்களில் புகார் அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என, அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

டிராபிக் ஒரு காரணம்:
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். அப்போது அரசு பஸ்களும் வேகமாக செல்ல முடியாது. இதனாலும் பொதுமக்கள் பஸ்கள் கிடைக்காமல் ஆங்காங்கு காத்துக்கிடக்கின்றனர்.

அணிவகுக்கும் பஸ்கள்:
எம்டிசியில் முறையான கால அட்டவணை பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக பஸ்கள் ஒரே வழித்தடத்தில் தொடர்ந்து அணிவகுத்து செல்கிறது. இந்த பிரச்னை திருவான்மியூர்-கோயம்பேடு வழித்தடத்தில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தொடர்ந்து திருவான்மியூரில் இருந்து கோயம்பேட்டுக்கு தொடர்ந்து பஸ்கள் செல்கின்றன. இதனால் திருவான்மியூரில் இருந்து கோயம்பேடு செல்வதற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும்நிலையில் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. எனவே இத்தகைய போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற வகையில் கால அட்டவணை தயாரித்து, பயன்படுத்த வேண்டும். மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் பஸ்களும் இரவு நேரத்தில் நிறுத்தப்படுவதால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...