திருச்செந்தூர்,
திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் முத்து நகரைச் சேர்ந்தவர்கள் முனியசாமி மனைவி கோமதி (வயது 45), மூக்காண்டி மனைவி ஜெயலட்சுமி (45). துப்புரவு பணியாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றபோது, வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரம் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் கோமதி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜெயலட்சுமிக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவரை கைது செய்ய வேண்டும். வாகனம் மோதியதில் இறந்த கோமதியின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வலியுறுத்தி, உறவினர்கள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கோமதியின் உடலை வாங்க மறுத்து, நேற்று மதியம் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு 2-வது நாளாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.
உடனே திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்துராமன், ரஞ்சித்குமார், பத்திரகாளி என்ற பவுன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவரை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு, கோமதியின் உடலை வாங்கி சென்று இறுதிச்சடங்கு நடத்தினர். இதனால் அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

No comments:
Post a Comment