Sunday, 22 December 2019

காஞ்சி மாவட்டம் முழுவதும் காலாவதியான குளிர்பானங்கள் 3408 லிட்டர் பறிமுதல்: உணவுப் பாதுகாப்பு அதிகாரி தகவல்

காஞ்சிபுரம், டிச.22: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 3408 லிட்டர் கலாவாதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறினார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு வணிகம் செய்பவர்களில் உரிமம் பெற்றவர்கள் 7,541 பேர், பதிவு சான்றிதழ் மட்டும் பெற்றிருப்பவர்கள் 24,508 பேர் உள்பட மொத்தம் 32,049 பேர் உள்ளனர். இதில் 1,540 பேரிடம் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டதில் 171 பேரது உணவுகள் பாதுகாப்பற்றது எனக் கண்டறிந்துள்ளோம்.

தரம் குறைவான உணவுகளை விற்பனை செய்ததாக 249 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர 343 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 172 பேரிடம் மொத்தம் 40.14லட்சம் அபராதம் வசூலித்துள்ளோம். உணவுப் பாதுகாப்பு குறித்து புகார்கள் இருந்தால், பொதுமக்களுக்கு மாநில அளவில் வாட்ஸ்அப் எண் 9444042322 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 30க்கும் மேற்பட்ட புகார்கள் மாதம் தோறும் வருகின்றன.

கடந்த மார்ச் மாதத்தி–்ல் இருந்து 363 புகார்கள் வாட்ஸ்அப் மூலமாக பெறப்பட்டு, 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலாவதியான குளிர்பானங்கள் 3408 லிட்டரும், கெட்டுபோன உணவுகள் 4816 கிலோவும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 49 ஆயிரம் கிலோ, நெகிழிப்பைகள் 492 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 கோயில்களில் சுகாதாரமான முறையில் பிரசாதம் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு தேநீர்க்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக உணவுப் பாதுகாப்புத்துறை மூலம் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு தொடர்பான சோதனைகளை உணவு விற்பனை செய்யும் நிறுவனங்களில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...