சென்னை,
சென்னை பெருநகர போலீஸ், பொதுமக்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். சென்னை மாநகர் முழுவதும், குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆபத்து காலங்களில் பெண்களுக்கு உடனடியாக உதவ பெருநகர சென்னை போலீசார் ‘காவலன் எஸ்.ஓ.எஸ்.’ என்ற செல்போன் செயலியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினர். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறுவதால், அதனை தடுக்க காவலன் செயலி குறித்து பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காவல் செயலி செயல்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
50 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளது
இந்த நிகழ்ச்சிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
சென்னையில் 400-க்கும் அதிகமான ரோந்து வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். தற்போது செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் தனிக்குழு செயல்பட்டு வருகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறோம். பெண்கள் சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத நபர்களிடம் பேசி புகைப்படங்களையும், தங்களை குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் காவலன் செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் கபில்குமார் சி.சராட்கர், மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் திருநாவுக்கரசு, டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவிகள், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்
ReplyDelete