சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் நர்சிங் கல்லுாரி துவக்காமல், சுகாதாரத்துறை சுணக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கையில் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை 2012-13 ல் துவக்கப்பட்டது. இக்கல்லுாரி துவங்கி 7 ஆண்டாகியும், சுகாதாரத்துறை மருத்துவமனைக்கு தேவையான சிறப்பு நிபுணர்களை நியமிக்கவில்லை. மேலும், புதிய பாடத்திட்டங்கள், துணை படிப்புகளான நர்சிங், டிப்ளமோ டெக்னீசியன் பாடப்பிரிவுகளை துவக்க முன்வரவில்லை.
இங்குள்ள முதல்வர் சிறப்பு சிகிச்சை வார்டு, 500 படுக்கை வார்டு, குழந்தைகள் மகப்பேறு மையம், பொது பிரிவில் தினமும் ஆயிரத்து 300 வெளிநோயாளிகள், கர்ப்பிணிகள், இருதய நோயாளிகள் வருகின்றனர். நோயாளிகள் வருகைக்கு ஏற்ப நர்சுகள் இல்லை. பெரும்பாலான நர்சுகள் மதுரை, புதுக்கோட்டை போன்ற மருத்துவமனைகளில் மாற்றுபணியாக உள்ளனர். இங்கு ஏற்பட்டுள்ள நர்சுகள் காலிபணியிடத்தை நிரப்ப அரசு அக்கறை காட்டவில்லை. இச்சூழலில் அரசு நர்சிங் கல்லுாரி துவக்கினால், பயிற்சி பெறும் நர்சிங் மாணவிகளை வைத்து, நோயாளிகளுக்கு சிறு சிறு உதவிகளை செய்யலாம் என எதிர்பார்க்கின்றனர்.
இதனால் பிளஸ் 2 முடிக்கும் இம்மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், நர்சிங் படிக்க ஆர்வம் இருந்தும், கல்லுாரி இல்லாததால் படிப்பை கைவிட்டு விடுகின்றனர். எனவே அரசு, சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் நர்சிங் கல்லுாரி துவக்க முன்வரவேண்டும்.
No comments:
Post a Comment