Thursday, 26 December 2019

உள்ளாட்சி தேர்தல் களத்தில்‘தோழமை சக்திகளுடன் துணை நின்று வென்று காட்டுவோம்’தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,

உள்ளாட்சி தேர்தல் களத்தில் தோழமை சக்திகளுடன் துணை நின்று வென்று காட்டுவோம் என்று மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பலமாக கட்டமைக்கப்படும்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரை நிறைவடைந்து, வாக்குப்பதிவுக்கான நேரம் நெருங்கி வருகிறது. எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சி அமைகிறதோ அப்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்பு பலமாகக் கட்டமைக்கப்படும். ஊராட்சிகள் தோறும் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும். எப்போதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சி அமைகிறதோ அப்பொதெல்லாம் உள்ளாட்சி என்கிற கட்டமைப்பு சிதறடிக்கப்படுவது வழக்கம். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பதை, 2016-ம் ஆண்டு நடைபெறவேண்டிய உள்ளாட்சித் தேர்தல், 3 ஆண்டுகளுக்குப் பின்னர், 2019 இறுதியில், அதுவும் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே நடைபெறுவதில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

ஊர்கள் தோறும் குப்பை மேடுகள், குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடைக் குட்டைகள், தெருவிளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்த பகுதிகள், குடிநீர்க் குழாயைத் திறந்தால் வெறும் காற்றுதான் வருகிறது என்ற படுமோசமான நிலைமை. கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை; சுகாதார வசதிகள் இல்லை; சுற்றுப்புறம் தூய்மையாக இல்லை; மக்கள் நலனில் ஆட்சியாளர்களுக்கு அறவே அக்கறை இல்லை. அதனால்தான், ஒவ்வோர் ஊராட்சி நோக்கியும் எதிர்க்கட்சியான தி.மு.க. சென்றது.

அதிகாரிகளுக்கு பாதிப்பை உண்டாக்கும்

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் என, தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஊராட்சிகளில் கூட்டங்கள் நடத்தி, மக்களை நேரடியாகச் சந்தித்தது தி.மு.க.

ஊராட்சிகள் தோறும் மக்களிடம் சென்று, அவர்களின் மனங்களை வென்ற தி.மு.க. தான் ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் பெரு வெற்றி பெறும் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்திருப்பதால், தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளையும் தங்கள் கைப்பாவையாக்கிக் கொண்டு முறைகேடுகளைச் செய்து, தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்துப் பறித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

தேர்தல் பணியில் உள்ள மாவட்ட கலெக்டர் தொடங்கி, அனைத்து அதிகாரிகள் மீதும் தி.மு.க.வுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கடமை தவறாமல் தங்கள் ஜனநாயகப் பணியை பயமின்றி, பாரபட்சமின்றி நிறைவேற்றிட வேண்டும். அலட்சியம் காட்டினால், அதனால் விளைகின்ற சீர்கேடுகள், பொதுமக்களுக்கு மட்டுமின்றி, அதிகாரிகளுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும். அதற்கு அதிகாரிகள் இடம் கொடுக்க மாட்டார்கள் எனப் பெரிதும் நம்புகிறேன்.

சட்டத்தின் முன் நிற்க வேண்டும்

ஆளுங்கட்சியின் தில்லு முல்லுகளுக்கு உடன்போகக் கூடியவர்கள், ஆட்சி மாற்றம் ஏற்படும்போது சட்டத்தின் முன் நிற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டே தீரும் என்பதை நிச்சயம் மறக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

நம்பிக்கை பெருகியிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காகக் காத்திருக்கிறது. செழித்து விளைந்திருக்கும் வெற்றியை மிகவும் கவனமாக அறுவடை செய்து, ஒரு நெல்மணிகூட சிந்தாதபடி அப்படியே கொண்டுவந்து களஞ்சியத்தில் சேர்த்திடும் பெரும் பொறுப்பு, தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்கள் கைகளிலேதான் இருக்கிறது.

உறுதியாக துணை நின்று...

தி.மு.க. வேட்பாளர் போட்டியிடும் இடமாக இருந்தாலும், தோழமைக் கட்சியினர் போட்டியிடுகின்ற இடமாக இருந்தாலும், வெற்றி ஒன்றே குறிக்கோள். வேறெதுவும் நம் கவனத்தைச் சிதறடித்துவிட அனுமதிக்கக் கூடாது.

தற்போதைய ஆட்சியாளர்களை விரட்டியடித்திடுவதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள வாய்ப்புதான் ஊரக உள்ளாட்சித் தேர்தல். நாளைய நல்லாட்சிக்குக் கட்டியம் கூற, உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தோழமை சக்திகளுடன் உறுதியாகத் துணை நின்று வென்று காட்டுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...