Wednesday, 18 December 2019

நல்ல கணவர் கிடைத்திட இளம் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய மார்கழி விரத முறை

நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், ஆயர்பாடியில் இருந்த இளம் பெண்கள் நோன்பு நோற்றனர். மார்கழியில் இதனை பின்பற்றியதால், மார்கழி நோன்பு என்றும், இளம் பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் இது அழைக்கப்படுகிறது.

இந்த நாட்களில் திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி ஆகியவற்றை பாடி இறைவனை பெண்கள் வழிபடுகின்றனர். இறைவன் கண்ணனை நினைத்து ஆண்டாள் பாடிய திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது. சிவனை நினைத்து மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சியிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.

மார்கழி மாதத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த ஓஸோன் காற்று அதிகம் இருக்கும் என்பதால், காலை 4.30 மணிக்கு எழுந்து நீராடி, திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். மார்கழி முதல் தேதியன்று ”மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” பாடலைத் துவங்க வேண்டும். மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும். விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.

மார்கழி மாதத்தில் எல்லா கோயில்களிலுமே அதிகாலையில் பூஜை நடக்கும். கோயில்களில் மட்டுமின்றி வீட்டையும் சுத்தம் செய்து, காலை 8.30 மணிக்குள் எளிய பூஜை ஒன்றை பெண்கள் செய்யலாம். திருமணமான பெண்கள் இதைச் செய்தால் மாங்கல்ய பலம் கூடும். திருவிளக்கேற்றி, நம் இஷ்ட தெய்வங்களுக்கு பூச்சரம் அணிவித்து அல்லது உதிரிப்பூக்கள் தூவி, அந்தத் தெய்வங்கள் குறித்த பாடல்களை பாட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல் முதலானவைகளை சாமிக்கு படைக்கலாம். கற்கண்டு சாதம் அமுதம் போல் இருக்கும், குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். திருமணமாகாத பெண்கள் மட்டும் நெய், பால் சேர்த்த உணவைச் சேர்க்கக்கூடாது. நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் முதலானவற்றை வைத்தும் பூஜை செய்யலாம்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...