கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டில் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், திரையுலகம் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இதற்கு எதிராக சமூக ஊடங்களில் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.
பேட்ட, ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள திரைப்பட இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், '' இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது…'' என்று குறிப்பிட்டு இந்தியாவை மதச்சார்பற்றதாகவே வைத்திருப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக போராட்டம் பற்றி நடிகர் சித்தார்த், ''இவர்கள் இருவரும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனர் இல்லை; இவர்கள் சகுனி மற்றும் துரியோதனர். பல்கலைக்கழகங்களை, மாணவர்களை தாக்குவதை நிறுத்துங்கள்,'' என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நுழைந்த போலீசார் மாணவர்கள் விடுதிகளிலிலும் நுழைந்ததாக குற்றம்சாட்டி மாணவி ஒருவர் பேசும் காணொளியை தனது ட்விட்டரில் பகிர்ந்த நடிகை டாப்ஸி பன்னு, ''இது ஆரம்பமா? அல்லது முடிவா? இந்த காணொளி நமது இதயங்களையும், நம்பிக்கைகளையும் நொறுக்கிறது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜாமியா பல்கலைக்கழக மாணவி ஒருவர் தாக்கப்படும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, 'சாதாரண சிவில் உடையில் போலீசாருடன் இணைந்து ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை தாக்கும் இந்த மனிதர் யார் என்று யாராவது கூற முடியுமா?' என்று வினவியுள்ளார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'இது ரொம்ப தூரம் போய்விட்டது…..இனியும் அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. இது நிச்சயமாக ஒரு பாசிச அரசுதான்'' என்று கூறியுள்ளார்.
''பொருளாதாரத்தை வீழசெய்தது, வேலைவாய்ப்புகளை காணாமல் போகச் செய்தது, இணையதள சேவையை நிறுத்தியது, நூலகங்களுக்கு போலீசாரை அனுப்பியது. இளைஞர்களுக்கு பொறுமை உள்ளது, அதன் எல்லையை சோதித்துப்பார்க்க வேண்டாம்,'' என்று எழுத்தாளர் சேத்தன் பகத் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment