சண்டிகர்: டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் குளிர் மற்றும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பஞ்சாப், அரியானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு அடர்த்தியான பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அரியானா மாநிலம் நார்நூல் நகரில், வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸ் குறைந்து, 3.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதே போல, ஹிசார், கர்னால் நகரங்களிலும் மிகக் குறைந்த அளவாக முறையே 4.1, 4.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. அம்பாலாவில் 7.4, ரோஹ்தக்கில் 5.6, பிவானியில் 6.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
பஞ்சாபிலும் நேற்று காலை கடும் குளிர் வாட்டியது. பாட்டியாலாவில் 5.5, பதின்டாவில் 5.8, லூதியானாவில் 7, குர்தாஸ்பூரில் 6.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம், அமிர்தசரஸ், பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமான வெப்பநிலையே பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் வனஸ்தாலியில் 4.4, பிலானியில் 4.7, பில்வாரா மற்றும் சூரு பகுதிகளில் 5.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே காணப்பட்டது. சித்தூர்கர்க், கங்கா நகர், ஜெய்ப்பூரில் 5.8 டிகிரி செல்சியசும் பிகானெர், பலோடி, பார்மர் பகுதிகளில் முறையே 8.4, 10,11.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. டெல்லியிலும் நேற்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் காலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தனர். பனிப்பொழிவால் நொய்டா, குர்கானில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment