தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேவைப்பட்டால் நடிகர் ரஜினிகாந்தை விசாரணைக்கு அழைப்போம் என ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் 18-ம் கட்ட விசாரணை நேற்று நிறைவடைந்தது.
சம்பவத்தன்று இச்சம்பவத்தை பதிவுசெய்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் நேற்று விசாரிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியதாவது:
125 பக்க பிரமாண வாக்குமூலம்
துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை 445 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த அமர்வில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் ஆஜராகி 125 பக்கங்கள் கொண்ட பிரமாண வாக்குமூலம் மற்றும் அவர் வெளியிட்ட 5 தொகுப்புகள் கொண்ட அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முந்தைய ஒருவார காலத்தில் ஆட்சியர் அலுவலக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய உள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூடு தொடர்பாக அப்போது தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் ஒருசில செய்திகளை குறிப்பிட்டுள்ளார்.
சாட்சிகள் வலியுறுத்தல்
அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று, ஆணையத்தில் சாட்சிகளாக ஆஜரானவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேவைப்பட்டால் ரஜினிகாந்துக்கு அழைப்பாணை அனுப்பப்படும்.
இவ்வாறு ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் கூறினார்.
No comments:
Post a Comment