சென்னை மாநகராட்சி சார்பில், பேட்டரி வாகனங்கள் மூலம் வீடுவீடாகச் சென்று குப்பைகள் பெறப்பட்டுவரும் நிலையில், அந்த வாகனங்களுக்கு ஏற்ற வகையில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் 13,000 குப்பைத் தொட்டிகளை வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் தினமும் சுமார் 5,000 டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. அவை 19,158 தொழிலாளர்கள் மூலமாக வீடுவீடாகச் சென்று சேகரிக்கப்படுகின்றன. அந்த குப்பைகள் 5,482 எண்ணிக்கையில் உள்ள 3 சக்கர சைக்கிள்களில் சேகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள 14,500 குப்பைத் தொட்டிகளில் கொட்டப்பட்டு வருகின்றன.
இவை காம்பாக்டர் லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. தற்போது 3 சக்கர சைக்கிள்களுக்கு மாற்றாக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ், பேட்டரியால் இயங்கும் 411 எண்ணிக்கையிலான 3 சக்கர வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் வாங்கி பயன்படுத்தி வருகிறது. மேலும் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 14 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கு ஏற்ற வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வீடுவீடாகச் சென்று பெறுவதற்காக 80 லிட்டர் கொள்ளளவு கொண்ட குப்பைத் தொட்டிகளை வாங்க உள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் தற்போது பேட்டரியால் இயங்கும் 425 எண்ணிக்கையிலான 3 சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு குப்பைகள் ஏற்றப்பட்ட சைக்கிள்களை சிரமப்பட்டு இழுத்து வருவார்கள். பேட்டரியால் இயங்கும்மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள், குப்பை எடுத்து வருவதை எளிதாக்கிவிடுகிறது.
இந்த வாகனங்களுக்கு ஏற்ற வகையில் குப்பைத் தொட்டிகளை வாங்க இருக்கிறோம். அதன்படி, தலா 80 லிட்டர் கொள்ளளவு கொண்ட 13,000 குப்பைத் தொட்டிகள், ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் வாங்கப்பட உள்ளன. இதன் மூலம் வீடுவீடாகச் சென்று குப்பைகள் சேகரிப்பது எளிதாகும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:
Post a Comment