சத்தியமங்கலம்: தாளவாடி அருகே, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 10க்கும் மேற்பட்ட யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட, தாளவாடி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், கிராமத்தில் இருக்கும் தோட்டப்பகுதிகளில் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 10க்கும் மேற்பட்ட யானைகள் தாளவாடி அருகே, மல்லன்குழி கிராமத்தில் புகுந்தது. அப்போது, பாலு என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். உடனே யானைகள் அவரை வழி மறித்தது. சுதாரித்து கொண்ட பாலு, இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உடனடியாக, கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வன ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, யானைகள் துரத்தியதில் இரு வன ஊழியர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். யானைகளால், பயிர்கள் பலத்த சேதமடைந்ததால், பயிர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment