சென்னை,
சசிகலாவின் சட்டவிரோத பண பறிமாற்றம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
அம்பலம்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது கணக்கில் காட்டப்படாத ஏறத்தாழ ரூ.2 ஆயிரம் கோடியை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா எடுத்துக்கொண்ட முயற்சிகள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி வருமான வரித்துறை சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் உறவினரான கிருஷ்ணபிரியா வீட்டில் சோதனை நடத்தியது.
அதில் சிக்கிய 2 தாள்களில் சசிகலாவின் நெருங்கிய உறவினர் சிவகுமார் கைப்பட எழுதிய விவரங்களில் ரூ.1,674.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய பட்டியலுக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இதையொட்டி சம்மந்தப்பட்டவர்களிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பணமதிப்பு இழந்த தொகை...
அந்த காலக்கட்டத்தில் ஜெயலலிதாவின் வீட்டிலும், கொடநாடு பங்களாவிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் வெளிக்கொணரப்பட்டு, பல இடங்களில் பாதுகாப்பதற்காக சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மூலம் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தை கொண்டு சென்னையில் பல இடங்களில் வணிக வளாகங்கள், புதுச்சேரியில் உல்லாச விடுதி, கோவையில் காகித ஆலை, காஞ்சீபுரத்துக்கு அருகில் சர்க்கரை ஆலை, பழைய மகாபலிபுரம் சாலையில் மென்பொருள் நிறுவனம், கோவையில் 50 காற்றாலைகள் என தமிழகம் முழுவதும் பல இடங்களில் சட்டவிரோதமாக பணமதிப்பு இழந்த தொகையின் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான பேரங்கள் நடைபெற்றதையும் வருமான வரித்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது.
உதவியவர்கள் யார்?
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற ஊழலின் காரணமாக, சசிகலாவிடம் சிக்கி கொண்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு பகுதிதான் வருமான வரித்துறையிடம் சிக்கியிருக்கிறது. பண மதிப்பு நீக்கத்தினால் பாதிக்கப்பட்டபோது, அதை முதலீடாக மாற்றி சட்டவிரோதமாக சொத்துகள் வாங்குவதற்கு யார்? உதவியாக இருந்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். இது ஒரு மிகப்பெரிய கிரிமினல் ஊழல் குற்றமாகும்.
இத்தகைய நடவடிக்கைகளில் இன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். அ.தி.மு.க.வோடு இப்போது சசிகலாவுக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம்.
சி.பி.ஐ. விசாரணை
ஆனால் ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி நடத்துகிற அ.தி.மு.க.வுக்கும், அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் சம்மந்தம் இல்லை என்று யாரும் கூற முடியாது. எனவே ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா சம்பந்தப்பட்டுள்ள இத்தகைய சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதியின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இதன் மூலம் கடந்த கால அ.தி.மு.க. ஆட்சிகளில் நடந்துள்ள பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அம்பலமாவதற்கும், அதில் பயனடைந்தவர்கள் தண்டனைக்கு உட்படுவதற்கும் உரிய வாய்ப்பாக இந்த விசாரணை அமையவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment