மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைந்து கொண்டிருப்பதால் கடந்த காலங்களைப் போல் மீண்டும் படகு சவாரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளங்களில் ஒன்றாக விளங்குகிறது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்தெப்பத்தின் ஆழம் சுமார் 25 அடி ஆகும். கடந்த காலங்களில் தெப்பத் திருவிழாவுக்காக மோட்டார் மூலம் சில அடி உயரத்திற்கு மட்டும் தண்ணீர் நிரப்பப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வைகை ஆற்றிலிருந்து இயல்பான வழியில் தண்ணீர் கணிசமாக நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு தெப்பத்தில் முழுக் கொள்ளளவிற்கு எளிதாக தண்ணீர் நிரப்ப முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இத்தெப்பத்தில் தண்ணீர் தேக்கப்படும் காலங்களில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கட்டணத்துடன் கூடிய படகு சவாரி நடத்தப்பட்டு வந்தது. தாங்களாகவே இயக்கிக் கொள்ளும் மிதி படகுகள், மோட்டார் படகுகள் ஆகியவை இயக்கப்பட்டதால் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தெப்ப உற்சவத்திற்கான அளவு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டதால் படகு சவாரி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு முழுமையான ஆழத்திற்கு தண்ணீர் தேக்க முடியும் என்பதால் படகு சவாரி துவக்க கோவில் நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து “இந்து தமிழ்” உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட ஐராவதநல்லூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறியதாவது, பல ஆண்டுகளுக்கு பிறகு வண்டியூர் தெப்பக்குளத்தில் கால்வாய் வழியாக வைகை தண்ணீர் நிரப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் சில தினங்களில் முழுக்கொள்ளளவும் நிரம்பி விடும் என்பதால் படகு சவாரியை இந்த ஆண்டு முதல் மீண்டும் இயக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் சினிமா தியேட்டர்களை தவிர குடும்பத்துடன் பொழுதுபோக்க குறிப்பிடத்தக்க இடங்கள் இல்லை என்பதால் மதுரை மக்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

No comments:
Post a Comment