சூலுார்:
கொடி, தோரணம் கட்டுவது முதல், கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வருவது வரை, பணம் தண்ணீராக செலவு செய்யப்படுகிறது.
காசில்லாமல், உள்ளாட்சியில் ஊராட்சி உறுப்பினராக கூட ஜெயிக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு, கட்சி தலைவர் வருகை, பொதுக்கூட்டம் நடத்துவது, தேர்தல்களை சந்திப்பதாக இருந்தாலும், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் களத்தில் இறங்கி, அர்ப்பணிப்பு உணர்வுடன், இரவு பகலாக வேலை செய்வதை கண்டிருக்கிறோம்.கொடி கட்ட குழி தோண்டுவது, தோரணம் கட்டுவது, சுவர் விளம்பரங்கள் வரைவது என, அனைத்து வேலைகளையும் தொண்டர்களே செய்வது வழக்கம். வெறும் டீயை, குடித்து விட்டு, தலைவர் சொல்லிட்டாருன்னு, கடுமையாக கட்சிக்காக உழைத்தவர்கள் கடந்த கால தொண்டர்கள். காலங்கள் மாறின... காட்சிகளும் மாறின...
இதனால், தொண்டர்களின் எண்ணங்களும் மாறியுள்ளன. வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்ட கட்சிகள் மற்றும் நிர்வாகிகள், பணத்தை வாரி இறைக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டனர்.எம்.எல்.ஏ., - எம்.பி., தேர்தல் முதல் உள்ளாட்சி தேர்தல் வரை அனைத்தையும் எதிர்கொள்ள, பணத்தை கணக்கில்லாமல் செலவு செய்தால் மட்டுமே, தங்களை மக்கள் மதிப்பார்கள் என்ற எண்ணத்துக்கு, கட்சி நிர்வாகிகள் வந்து விட்டனர். இது உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலிக்கிறது.தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, கிராமங்களில் உள்ள தங்கள் ஆதரவாளர்களை 'கவனிக்க' தொடங்கி விட்டனர் நிர்வாகிகள்.
குத்துவிளக்கு, அண்டா, குண்டாக்களை பரிசளிப்பது; கிடா விருந்துடன் தனி கவனிப்பு, 'வெற்றி பெற்றால், இதை செய்வேன், அதை செய்வேன், சொத்தை வித்தாவது உங்களை காப்பாற்றுவேன்' என, வாக்குறுதிகள் வேறு.வேட்புமனுத்தாக்கல் செய்யவே, நுாற்றுக்கணக்கான வாகனங்களில், ஆயிரக்கணக்கான தொண்டர்களை அழைத்து வந்து கெத்து காட்டுகின்றனர் இந்த குட்டி தலைவர்கள்.மேலும், உடன் வருவோருக்கு புது கரை வேட்டி, புடவை மற்றும் துண்டு வழங்குகின்றனர். உணவு, குடிநீர், மது பாட்டில்கள் உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகின்றன.
இதனால், குடும்பம் குடும்பமாக கூப்பிடும் இடத்திற்கு அனைவரும் வாகனம் ஏறி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக பல கிராமங்களில், உள்ள பல தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதில்லை. முழு நேர தொழிலாக பிரசாரத்துக்கு செல்கின்றனர்.உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகள் பணத்தை தண்ணீரை செலவு செய்வது போல் செலவு செய்கின்றனர். 'இதுவரை சம்பாதித்த காசை செலவு செய்யட்டுமே' என, மக்களின் மனதிலும், 'ஜெயிச்சா சம்பாரிக்கத்தான் போறாங்க' என்று கட்சி தொண்டர்களின் மனதிலும் எண்ணங்கள் உருவாகியுள்ளது. இது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அறிகுறியாக தெரியவில்லை.

No comments:
Post a Comment