புதுடில்லி: நாட்டையே உலுக்கிய டில்லி மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஏழு ஆண்டுகள் முடியும் நிலையில், இந்த வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு விடுதலை கிடைக்குமா என, அவர்களுடைய குடும்பத்தார் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால், தண்டனை எப்போது நிறைவேற்றப் படும் என, நிர்பயா பெற்றோர் காத்திருக்கின்றனர். குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.தெற்கு டில்லியின் முனிர்கா பகுதியில், ஓடும் பஸ்ஸில், மருத்துவ மாணவி நிர்பயா, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சித்திரவதை செய்யப்பட்ட அவர், பின்னர் பஸ்சில் இருந்து துாக்கி எறியப்பட்டார்.
மருத்துவமனைவில் அந்த மாணவி உயிரிழந்தார். துாக்கு தண்டனை: கடந்த, 2012, டிச., 16ல் நடந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ராம் சிங் என்பவர், சிறையில் தற்கொலை செய்தார்.
மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மூன்று ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த அவர், விடுதலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் வினய் சர்மா, முகேஷ் சிங், பவன் குப்தா, அக் ஷய் குமார் சிங் ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை டில்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தன. அக் ஷய் குமார் தவிர, மற்றவர்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
அக் ஷய் குமார் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீது, நாளை விசாரணை நடக்க உள்ளது. இதில் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், டில்லி நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கை, டிச.,18ல் விசாரிக்கவுள்ளது. விடுதலை: இந்த நிலையில, பலாத்கார சம்பவம் நடந்து, இன்றுடன் ஏழு ஆண்டுகளாகிறது. இந்த ஏழு ஆண்டுகளாக, குற்றவாளிகளின் விடுதலைக்காக, அவர்களுடைய குடும்பத்தார் போராடி வருகின்றனர்.
இந்த வழக்கில், இவர்களுக்கு விடுதலை கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட நான்கு பேர், டில்லியின், ஆர்.கே. நகரின் ரவிதாஸ் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள். ராம் சிங் மற்றும் முகேஷ் சிங் சகோதரர்களின் தாய், ராஜஸ்தானுக்கு சென்று விட்டார்.
அதே நேரத்தில் வினய் சர்மா, பவன் குப்தாவின் குடும்பத்தார், இந்த பகுதியில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கூறியதாவது: நடந்த சம்பவம் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. இந்த வழக்கில் இவர்களுக்கு விடுதலை கிடைக்குமா என, தொடர்ந்து காத்திருக்கிறோம். எங்களுக்கு உதவுவதற்கு யாரும் முன் வரவில்லை. எங்களுடைய வலி யாருக்கும் புரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர். 12வது நாளாக உண்ணாவிரதம்: பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட, ஆறு மாதங்களுக்குள் அதை நிறைவேற்ற வலியுறுத்தி, டில்லி பெண்கள் கமிஷன் தலைவர் ஸ்வாதி மலிவால், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டம், 12வது நாளை எட்டியுள்ள நிலையில், நேற்று காலை அவர் மயக்கமடைந்தார். அதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
கால நிர்ணயம் தேவை: மருத்துவ மாணவி, 'நிர்பயா'வின் பெற்றோர் கூறியதாவது: எங்களுடைய மகளை இழந்துள்ளோம். இந்த வழக்கில், நீதி கிடைக்கும் என, ஏழு ஆண்டுகளாக காத்திருக்கிறோம். விரைவில் தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறுகின்றனர். ஆனால், தண்டனையை நிறைவேற்றும் வரை, எங்களுக்கு திருப்தி இல்லை.
எங்களுடைய மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அது கிடைத்த பிறகும் ஓய மாட்டோம். நாட்டில் மற்ற மகள்களுக்காக போராடுவோம். இதுபோன்ற வழக்குகளில், காலதாமதம் இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர். ரத்தத்தில் கடிதம்: 'நிர்பயா' வழக்கின் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, துப்பாக்கிச் சுடும் வீராங்கனை, வர்திகா சிங், ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு இந்தக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார். அதில், 'நிர்பயா குற்றவாளிகளின் தண்டனையை, ஒரு பெண் தான் நிறைவேற்ற வேண்டும்; அந்த வாய்ப்பை எனக்கு அளிக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment