செங்குன்றம் அருகே இரு சுவர்களுக்கிடையே சிக்கிக் கொண்ட 12 வயதுச் சிறுவன் ஒன்றரை மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டான்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள மொண்டியம்மன் நகர்- அசோகர் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் நித்திஷ் (12), செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவன் நித்திஷ் நேற்று இரவு 7 மணியளவில் தன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக வீட்டின் சுவருக்கும், சுற்றுச் சுவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் நித்திஷை மீட்க முயன்றனர். அது பலனளிக்கவில்லை. இதையடுத்து, பொதுமக்கள் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.
தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சுவர்ப் பகுதியை உடைத்து, நித்திஷை ஒன்றரை மணிநேரம் போராடி மீட்டனர். இச்சம்பவம், செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ''குழந்தைகள் விளையாடும்போது, பெற்றோர் அவர்களை அடிக்கடி கவனித்துக்கொள்ள வேண்டும். தண்ணீர்த் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும். பள்ளங்களை மூட வேண்டும். காலி இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

No comments:
Post a Comment