சென்னை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதனை அப்படியே அடிபணிந்து ஏற்று கொள்ளக்கூடியவர்களாக முதல்வர் உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டம் தொடர்பாக சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மதிமுக பொது செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பின்னர் நிருபர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சார்பில் நடந்த கூட்டத்தில், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை வலியுறுத்தி, வரும் 23ம் தேதி காலை 10 மணியளவில், சென்னையில், குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். நாட்டின் அமைதியை குழிபறிக்கும் சட்டமாகவும், அமைதியை குலைக்கும் சட்டமாகவும் அமைந்துள்ளது. அண்டை நாடு பட்டியலில், இலங்கை விடுபட்டிருப்பது ஏன்? அகதிகளாக வரும் பிற மதத்தினர் போல் முஸ்லிம்களை தவிர்த்து ஏன்? என்ற எங்களின் கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
ராஜ்யசபா எம்.பி.,க்களான அதிமுகவை சேர்ந்த 11 பேர், பாமகவை சேர்ந்த ஒருவர் எதிர்த்து ஓட்டு போட்டதால் தான், குடியுரிமை சட்ட திருத்த மசோதா சட்டமானது. இதனால், அவர்கள் தமிழின துரோகிகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அவர்களை, தமிழகம், தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதில்:
இந்த சட்டத்தினால், இந்தியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற முதல்வர் இ.பி.எஸ்., கூறியது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அளித்த பதில்:முதல்வர் இ.பி.எஸ்.,-ஐ பொறுத்தவரை, மோடி, அமித்ஷா மற்றும் மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதனை அப்படியே, அடிபணிந்து காலில் விழுந்து ஏற்று கொள்ள கூடியவர்கள். எனவே, அப்படி சொல்வது ஓன்றும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றார்.
குடியுரிமை மசோதா தொடர்பாக பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் குறித்தும், திமுகவை கண்டிதது 20 ல் போராட்டம் நடத்தப்போவதாக கூறியது குறித்தும் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில்,
அவர்கள் நடத்தும் போராட்டத்தில், தலையிட விரும்பவில்லை. ஏற்கனவே 5 வருடம் அவர்கள் தான் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது செய்த சாதனையை மக்களிடம் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். எதுவும் செய்யவில்லை. இதனால் வீண் விதண்டவாதத்தை அவர்கள் கையாள்கிறார்கள் என்றார்.
மேலும் அவர், திமுகவின் பேரணி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது பற்றி, விரைவில் முடிவெடுப்போம். மசோதாவிற்கு எதிராக வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என்பது எங்களின் கருத்து என்றார்.

No comments:
Post a Comment