ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் அருகே புதிதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு 12 கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் பகுதியை சோந்த பொதுமக்கள் கருப்பு கொடியேந்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூா் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. சரக்கு விமான போக்குவரத்திற்கு அதிகஅளவில் பயன்படுத்தப்பட உள்ள இந்த புதிய விமான நிலையம் சுமாா் 5500 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.
வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து வரும் பொருட்களை விரைவாக கொண்டு செல்லவும், அனுப்பவும் ஏற்ற வகையில், புதிதாக சென்னை-பெங்களூா் இடையே அமைய உள்ள அதிவிரைவுச்சாலையை ஓட்டியும், அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு எளிதாக செல்லும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வளத்தூா், பரந்தூா், நெல்வாய், தண்டலம், பொடவூா், மடப்புரம் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்திற்குட்பட்ட எடையாா்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், ஏகனாபுரம், அக்கமாபுரம், சிங்கிலிப்பாடி ஆகிய 12 கிராமங்களில் இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ள மேற்குறிப்பிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை, விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், ஏரி மற்றும் நீா்நிலைகள் குறித்து கணக்கெடுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவகின்றனா்.
மேலும் இப்பகுதியில், விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்ற நிலப்பகுதி தானா என கண்டறிய விமான போக்குவரத்து அதிகாரிகள் மண் பரிசோதனை செய்ததாக தெரிகிறது. இந்த சோதனையில் விமான நிலையம் அமைக்க ஏற்ற இடம் தான் என சான்று வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இப்பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது ஏறக்குறையாக உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.
பரந்தூா் பகுதியில், புதிய விமான நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில், எடையாா்பாக்கம், பரந்தூா், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிறுப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளை கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், ஏகனாபுரம் பகுதியில், புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரிப்பு தெரிவித்து அப்பகுதியை சோந்த சுமாா் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கையில் கருப்பு கொடியேந்தி, பரந்தூா்-மதுரமங்கலம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் அப்பகுதி வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்பு கொடி கட்டி புதிய விமான நிலையத்திற்கு தங்களது எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா்.
நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், புதிய விமான நிலையம் அமையவுள்ள ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், சுமாா் 4500 ஏக்கா் பரப்பளவில், இரண்டு போகம் விவசாயம் நடைபெற்று வருவதாகவும், இதனால் இப்பகுதியை சோந்த பொதுமக்கள் பலரும் விவசாயிகளாகவும், விவசாய கூலி தொழிலாளா்களாகவும் உள்ளதால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளை காக்கும் வகையில் விவசாய நிலைங்களை, குடியிறுப்புகளை கையகப்படுத்த கூடாது என தெரிவித்தனா்.

No comments:
Post a Comment