புதுடெல்லி,
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான 2-வது தேசிய ஆலோசனை கூட்டம் தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் மாலை 3 மணிக்கு தொடங்கி 5 மணியளவில் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு திரும்பிய எடப்பாடி பழனிசாமியிடம், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஒருசில இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்களாகவே கலைந்து சென்று விட்டனர். இதனால் எந்த பிரச்சினையும் இல்லை.
மாநில அரசை பொறுத்தவரையில் சட்டம்-ஒழுங்கை காப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி, அகிம்சை முறையில் போராட்டம் நடத்தினால் எந்தவித பிரச்சினையும் இல்லை.
இந்தியாவில் வாழும் மக்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று பிரதமரும், உள்துறை மந்திரியும் கூறி உள்ளனர். எந்த பாதிப்பும் இல்லாவிட்டாலும் போராட்டம் நடத்தியே ஆக வேண்டும் என்பவர்களை எப்படி தடுத்து நிறுத்துவது? எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே ஒரு குற்றச்சாட்டை கூறி போராட்டத்தை தூண்டிவிட்டிருக்கிறார்கள்.
இந்த சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்க எங்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
2011 மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கி வாபஸ் பெறும் தேதியும் முடிந்துவிட்டது. இனி தேர்தல் உறுதியாக நடக்கும்.
தேர்தல் ஆணையத்தின் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கோர்ட்டுதான் தீர்வு காண முடியும். இது தேர்தல் கமிஷனுக்கும், கோர்ட்டுக்கும் உள்ள பிரச்சினைதான். மாநில அரசு தொடர்புடைய பிரச்சினை இல்லை.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்திய கோரிக்கையை நானும் ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது வலியுறுத்தினேன். இன்றும்(நேற்று) இதுகுறித்து தினமும் உள்துறை மந்திரியிடம் வலியுறுத்த உள்ளேன். தமிழகத்தில் தமிழக மக்கள் பெறும் எல்லா நலத்திட்ட உதவிகளையும் இலங்கை தமிழர்களும் பெற்று வருகின்றனர்.
தற்போது உள்ளாட்சித்துறை சார்பாக 13 விருதுகளை தமிழக அரசு பெற்றிருக்கிறது. இந்த விருதுகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரடியாக வந்து பெற்றுள்ளார். இதனையும் சேர்த்து தற்போது வரை மொத்தம் 99 விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. சிறப்பான நிர்வாகத்திறமை காரணமாக மத்திய அரசு தேசிய அளவில் தமிழகத்துக்கு விருதுகளை வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார்.
இதேபோல் டெல்லி சாகேத் பகுதியில் 4 தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் டெல்லி தலைமை அலுவலகத்தை முதல்-அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
முன்னதாக டெல்லி சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் மற்றும் எம்.பி.க்கள் மலர்கொத்து கொடுத்து முதல்-அமைச்சரை சிறப்பாக வரவேற்றனர்.

No comments:
Post a Comment