கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களிடம் வெற்றிலை மீது சத்தியம் வாங்கி, ஓட்டு சேகரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீர்க்கப்படாத பிரச்னைகளை தீர்ப்பதாக கூறி, ஒரு சிலர் ஓட்டு சேகரிக்கின்றனர். 'படித்த இளைஞர்களுக்கு தேர்வு பயிற்சி மையம், வேலை வாய்ப்பு பயிற்சி மையம் ஆகியவை அமைப்பேன்' என, உறுதி அளித்து, சிலர் ஓட்டு சேகரிக்கின்றனர்.பணம் மற்றும் அன்பளிப்பை வாங்கியும், சிலர் மாற்றி ஓட்டு போடுவர் என்பதால், கிராமங்களில் உள்ளவர்களிடம், வெற்றிலை மீது சத்தியம் வாங்கி, சில வேட்பாளர்கள், ஓட்டு கேட்டு வருகின்றனர்.இரவில், ஊர் முக்கிய பிரமுகர்களை வைத்து கூட்டம் நடத்தி, அதில் வெற்றிலை
சத்தியத்தை, வேட்பாளர்கள் வாங்குகின்றனர்.
இவ்வாறு சத்தியம் செய்து கொடுத்தவர்களுக்கு மட்டும், பணம் அல்லது அன்பளிப்பு வழங்க திட்டமிட்டு, அவர்களது பெயர்களை குறித்துச் செல்கின்றனர். மனுக்களை திருட முயற்சி: திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, வடகண்டத்தில், பஞ்., அலுவலகம் உள்ளது. இங்கு, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வாங்கப்படுகின்றன. நேற்று காலை, அவ்வழியாக சென்ற பொதுமக்கள், பஞ்., அலுவலக பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டனர்.
தகவல் கிடைத்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், பஞ்., அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கிருந்த பீரோவை உடைக்க, மர்ம நபர்கள் முயன்று இருப்பது தெரிந்தது.பீரோவை உடைக்க முடியாததால், அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், வாக்காளர் பட்டியல், ரப்பர் ஸ்டாம்ப், காசோலைகள் ஆகியவற்றை திருடி, வெளியே வீசி சென்றதும் தெரிந்தது. தடயவியல் நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்தனர். அதிகாரிகள் தரப்பில், 'இதுவரை தாக்கல் செய்யப்பட்ட, 27 வேட்பு மனுக்கள் பத்திரமாக உ ள்ளன' என்றனர்.
குடவாசல் போலீசார் விசாரிக்கின்றனர். அதிகாரி, 'சஸ்பெண்ட்' திருச்சி, உப்பிலியபுரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் பஞ்சாயத்தில், வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுக்கள் பெறும் அலுவலராக, உதவி வேளாண் அலுவலர் முருகன் நியமிக்கப்பட்டிருந்தார்.நேற்று முன்தினம் காலை, வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டிருந்த முருகன், மாலை, 3:00 மணிக்கு மேல், மனுக்களை பெறாமல் வெளியில் சென்று விட்டார். மனு தாக்கல் செய்ய வந்தவர்கள், அலுவலர் இல்லாததால், மனு செய்ய முடியாமல் தவித்தனர். முருகனை தேடியபோது, அவர், மது போதையில் துாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, முருகனை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் சிவராஜ் உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment