சென்னை மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளில் ஆற்று மணலுக்குப் பதில் எம்.சாண்ட் பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் குற்றம்சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், 'உள்ளாட்சித் துறை ஊழல்களுக்கு வேலுமணியும், துறை சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும். 1,000 கோடி ரூபாய் ஊழல் குறித்து, உடனடியாக உரிய விசாரணை நடத்தி வேலுமணியையும், அவருக்கு துணை போகும் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளையும் விரைவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி வெளியிட்ட அறிக்கையில்,'உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த முழு முயற்சி மேற்கொண்டு படுதோல்வியுற்ற ஸ்டாலின், தமிழக அரசைக் களங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கத்துடன், இல்லாத ஒன்றை இருப்பதைப் போல இட்டுக்கட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிப் பணிகளில் ஆற்று மணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுத்துவிட்டு எம்-சாண்ட் பயன்படுத்துவதாகவும், 1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது எனும் நஞ்சைக் கக்கி இருக்கிறார் ஸ்டாலின் என்றும் விமர்சித்த வேலுமணி, 'பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள், தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி முறையாக ஆன்லைன் மூலம் கோரப்பட்டு, விதிகளுக்குட்பட்டு ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 ஆண்டுகளில், ஆற்று மணல் அல்லது எம்-சாண்ட் கலந்த சிமெண்ட் கலவைகள் கொண்டு ரூ.1164.85 கோடிக்கு பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு, நடைபெற்ற ரூ.1164.85 கோடி பணிகளில், மணல் சேர்த்து செய்யப்படும் கான்கிரீட் பணிகள் 33 சதவிகிதமே ஆகும். இதன் மதிப்பீடு ரூ.384.04 கோடி மட்டுமே ஆகும். இந்த கான்கிரீட் பணிகளில் கலக்கப்படும் எம்-சாண்ட் அல்லது ஆற்று மணலின் அளவு வெறும் 8.5 சதவிகிதம் மட்டுமே ஆகும். அதாவது, ரூ.32.67 கோடி அளவிலான கான்கிரீட் பணிக்கு மட்டுமே எம்-சாண்ட் அல்லது ஆற்று மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
செயல்படுத்தப்படும் பணிகளின் மதிப்பே வெறும் ரூ.32.67 கோடி தான் என்னும் போது, அதில் ஏதோ ரூ.1000 கோடி முறைகேடு நடந்து விட்டதாக ஸ்டாலின் கூறியிருப்பது எவ்வளவு கடைந்தெடுத்த பொய் என்பதையும், அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் எந்த அளவுக்கு தன் தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார் என்பதையும் தமிழக மக்கள் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்றும்.
சாண்ட் பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு எவ்வித நிதி இழப்பும் இல்லை. தோல்வி பயத்தின் காரணமாக தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு பிதற்றி வருகிறார். ஸ்டாலின் அமைதி காப்பது அவருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும், அவரை தலைவராகக் கொண்டிருக்கும் கட்சிக்கும் நல்லது.
'என் மீதான புகாரை நிரூபித்தால், அதிமுக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை துறந்து, அரசியலை விட்டே விலகத் தயார். நிரூபிக்க ஸ்டாலினால் முடியவில்லை என்றால், அவர் திமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவிகளை துறந்துவிட்டு அரசியலை விட்டே ஒதுங்கிப் போக வேண்டும்' என்றும் சவால் விட்டுள்ளார்.

No comments:
Post a Comment