சென்னை,
சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இதை பார்வையிட சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் இன்று (வியாழக்கிழமை) காலை 8.08 மணியில் இருந்து 11.19 மணி வரை நிகழ்கிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. இதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் சவுந்தரராஜன் கூறியதாவது:-
சூரியன், நிலவு (சந்திரன்) மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் நிலவு (சந்திரன்) சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) சூரிய கிரகணம் நிகழ்கிறது.
சிவப்பு நிற வட்ட வளையம்
இந்த நிகழ்வு இன்று காலை 8.08 மணி அளவில் தொடங்கி 11.19 மணி வரை நீடிக்கும். சரியாக 9.35 மணி அளவில் சூரியனை, நிலவு முழுமையாக மறைக்கும். இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலை பெற்றிருக்கும். அதற்கு பிறகு நிலவு, சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.
இதனை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது. அது கண்களின் விழித்திரையை பாதிக்கும். நிலவு சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும். அதுவும் மேக மூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தால்தான் காணலாம்.
அடுத்து 2031-ம் ஆண்டு
தமிழகத்தில் சென்னை, ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உள்பட தென்னிந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம்.
அதேபோல், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும். இன்று ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்ற சூரிய கிரகணம் 2031-ம் ஆண்டு மே 16-ந்தேதிதான் நிகழும்.
சிறப்பு ஏற்பாடு
இந்த அபூர்வ நிகழ்வை சாதாரண வகை தொலைநோக்கியைப் பயன்படுத்தி நேரடியாக காண்பது கடினம். எனவே சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்காக, சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிக சக்தி வாய்ந்த 3 தொலைநோக்கிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு 20 அலுவலர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
வெல்டர்கள் பயன்படுத்தும் கண்ணாடிகள், என்-14 ரக கண்ணாடி, அங்கீகரிக்கப்பட்ட கண்ணாடி உள்ளிட்ட சன் பில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தி கிரகணத்தை காண வேண்டும். நேரடியாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெறும் கண்களால் சூரியனை பார்க்கக்கூடாது
சூரியகிரகணம் இன்று காலை 8.08 மணி முதல் 11.19 வரை நிகழ்கிறது. இந்த நேரத்தில் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் ஆஸ்பத்திரி மருத்துவ நிலைய அதிகாரி(ஆர்.எம்.ஓ) டாக்டர் செந்தில் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
சூரியகிரகணத்தை பெரியவர்கள், குழந்தைகள் யாரும் வெறும் கண்ணால் சில நிமிடங்கள் கூட பார்க்கக்கூடாது. கருப்பு கண்ணாடி, ‘கூலிங் கிளாஸ்’, பிரதிபலிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளிட்டவைகள் வழியாகவும் பார்க்கக்கூடாது.
இதனையும் மீறி பார்வையிட்டால், கண் பார்வை பறி போகும் அபாயம் இருக்கிறது. எனவே இதில் யாரும் அலட்சியம் காட்டக்கூடாது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள், பிர்லா கோளரங்கம் சென்று பார்வையிடலாம். அல்லது தொலைக்காட்சிகளில் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment