'உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் அறிவித்தது, அவரது கட்சியினரிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சி வளர்ச்சிக்கு, அடிப்படை கட்டமைப்பு அவசியம். அனைத்து ஊர்களிலும், கிளைகள் இருக்க வேண்டும். அதேபோல, உள்ளாட்சி தேர்தலில், மக்கள் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். அப்போது தான், கட்சி வளர்ச்சி அடையும்.௩ சதவீத ஓட்டுஇதில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் உறுதியாக உள்ளன. இரு கட்சிகளும், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்.
ஆனால், உள்ளாட்சி தேர்தலில், முக்கியத்துவம் அளிப்பதில்லை.சிறிய கட்சிகளை, ஊராட்சி அளவில் வளர்த்து விட, இரு கட்சி தலைமையும் விரும்புவதில்லை. இது தெரியாமல், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியை முறித்துக் கொண்ட கட்சிகள், வளர்ச்சி அடையவில்லை. ம.தி.மு.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைத்து வெற்றி பெற்றாலும், உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி அமைக்காததால், அவை முக்கியத்துவத்தை இழந்தன; கட்சி வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், நடிகர் கமல், 'மக்கள் நீதி மையம்' என்ற கட்சியை துவக்கினார். அவரது கட்சி, ௩ சதவீத ஓட்டுகளை பெற்றது.
அக்கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, மிகவும் ஆர்வமாக இருந்தனர்.ஆனால், 'உள்ளாட்சி தேர்தலில், மக்கள் நீதி மையம் போட்டியிடாது' என, கமல் அறிவித்தது, அவரது கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஏமாற்றம் இது குறித்து, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றால் தான், மக்களுடன் நெருக்கமாக முடியும்; அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்; கட்சியை வளர்க்க முடியும்; கட்சிப் பணிக்கு செலவிட முடியும்.கிராம அளவில், மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக, கிராம சபை கூட்டங்களை நடத்தினோம்; அரசு நடத்திய கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். தற்போது, நாமே போட்டியிடாமல் பின்வாங்குவது, எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு, சில பதவிகளை பிடித்தால் தான், மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து போட்டியிட முடியும். தலைமை போட்டியிடுவதில்லை என அறிவித்தது, ஏமாற்றத்தையே அளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
