நெல்லையை அடுத்த கரையடி பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர், இசக்கிமுத்து என்ற கணேச பாண்டியன். 26 வயது இளைஞரான இவர் மீது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நெல்லை புறநகர் பகுதியான பேட்டை காவல்நிலையத்தில் இவர் ரவுடிகள் பட்டியலில் உள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டம் மேலமங்கலகுறிச்சி கிராமத்தில் இரட்டைக் கொலை நடந்தது. அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணன் என்பவர் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட வரும்போது வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் கொலையில் இசக்கிமுத்து என்ற கணேசபாண்டியன் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றிருந்தார்.
கொலை வழக்கில் ஜாமீன் பெற்றதால் சொந்த ஊரில் குடியிருந்த இசக்கிமுத்து இன்று காலை தன் நண்பர்களுடன் அங்குள்ள பிள்ளையார்கோயில் அருகே பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாமி கும்பிட வந்ததுபோன்று இரு பைக்கில் நான்கு பேர் வந்துள்ளனர். அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த வாள், அறிவாள் போன்றவற்றை எடுத்து இசக்கிமுத்துவை சரமாரியாக வெட்டியுள்ளனர்.தப்பியோட முயன்ற அவரை விரட்டிச் சென்ற கும்பல் வெட்டியிருக்கிறது.
அவரின் நண்பர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் திரண்டு ஓடிவந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்த இரு போலீஸாரும் ஓடி வந்திருக்கிறார்கள். அதனால் அச்சம் அடைந்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடினார்கள். ஆனால், போலீஸாரும் பொதுமக்களும் சேர்ந்து கொலையாளிகளில் ஒருவரைப் பிடித்தனர். வெட்டுக்கயங்களுடன் இருந்த இசக்கிமுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் நம்பி என்பதும் நாங்குநேரியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தப்பியோடியவர்கள் தாழையூத்தைச் சேர்ந்த சுபாஷ், மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூரைச் சேர்ந்த துரைமுத்து என்பது தெரியவந்துள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில் கண்ணனைக் கொலை செய்ததற்குப் பழிவாங்கும் எண்ணத்தில் இந்தக் கொலையைச் செய்ததாக நவீன் ஒப்புக்கொண்டுள்ளார். இசக்கிமுத்துவைக் கொலை செய்யச் சரியான தருணத்துக்காகக் காத்திருந்ததாகவும் இதற்காகத் தினமும் அவரை நோட்டமிட்டு வந்ததாகவும் பிடிபட்ட நவீன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். தலைமறைவாக இருக்கும் மூவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:
Post a Comment