Sunday, 15 December 2019

கூடுதல் விலை வைத்து விற்பதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் சுழற்சி முறையில் ஆய்வு


சென்னை: டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைவைத்து மது விற்பனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்றால் 10 ஆயிரம் அபராதமும், விற்பனை குறைவான கடைகளுக்கு பணிமாறுதலும் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்தும் பயனில்லை. எனவே, கூடுதல் விலைவைத்து விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் மாவட்டம் தோறும் சுழற்சி முறையில் ஆய்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மண்டல அதிகாரிகள், கோவைக்கும், கோவை மண்டல அதிகாரி சென்னைக்கும் என சுழற்சி முறையில் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். 5 மண்டலங்களிலும் ஆய்வு பணிகள் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதத்தில் மட்டும் கூடுதல் விலைவைத்து விற்பனை செய்ததாக 3,867 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக விலைவைத்து விற்பனை செய்வதில் மதுரை மண்டலம் முதலாவதாகவும், திருச்சி மண்டலம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சேலத்தில் குறைவாகவே உள்ளது.

இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...