Saturday, 14 December 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பு: ஊராட்சி தலைவர் தேர்வுக்கு வாக்குச்சீட்டுகளுடன் தேர்தல்


ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்சிகள் சார்பிலும், பொதுச்சேவையில் ஈடுபட்டு வரும் பெண்களும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தனர்.

தங்கச்சிமடம் பகுதியில் வசிக்கும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த பல பெண்கள், தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய முன்வந்தனர். ஆனால், குறிப்பிட்ட ஒரு பெண் தவிர்த்து, மற்றவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தனர். மீறி வேட்புமனு தாக்கல் செய்தால் பிரச்னை செய்வதாகவும், குறிப்பிட்ட நபர்களால் மிரட்டல் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வேட்புமனு தாக்கல் செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் நால்வர் போட்டியிட்ட நிலையில், நேற்று தங்கச்சிமடத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய ஊராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜென்சி, லோவியா தெரஸ், குயின்மேரி, ரெஜி ஆகிய 4 பெண்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். இவர்களது புகைப்படங்களுடன் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டது. நேற்று காலை தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் போட்டியிடும் 4 பெண்களின் புகைப்படம் ஒட்டப்பட்ட நான்கு சில்வர் பாத்திரங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு குடும்பத்திற்கு ஒருவர் வீதம் வந்து வாக்குச்சீட்டு பெற்று ஓட்டளித்து சென்றனர். குறிப்பிட்ட நபருக்கு வாக்களிப்பதற்கு இரவோடு இரவாக வீடுதோறும் பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் கிடைத்தும் தங்கச்சிமடம் போலீசார் முதலில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயரதிகாரிகளுக்கு புகார் சென்ற நிலையில் வேறு வழியின்றி காலை 10 மணியளவில் தேர்தல் நடைபெற்ற மண்டபத்துக்கு சென்ற ராமேஸ்வரம் தாசில்தார் சந்திரன், டிஎஸ்பி மகேஷ் மற்றும் போலீசார் தேர்தலை தடுத்து நிறுத்தினர். அங்கிருந்தவர்கள் அனைவரையும் வெளியேற்றி மகாலை பூட்டினர். ராமநாதபுரம் அருகே சுமைதாங்கி கிராமத்தில் நேற்று முன்தினம் இதேபோல வாக்குப்பதிவு நடந்த நிலையில், தங்கச்சிமடத்திலும் தேர்தல் மூலம் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவரை தேர்ந்தெடுக்க முயன்ற சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குலுக்கல் முறையில் தேர்வு

தேனி மாவட்டம் ஸ்ரீரெங்கபுரம் கிராம கமிட்டியினர், தேர்தல் நடந்தால் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால், போட்டியின்றி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய முடிவு செய்தனர். இதற்காக குலுக்கல் நடத்துவது என்று முடிவு செய்தனர். அதன்படி 8 வார்டுகளில் போட்டியிட விரும்புவோரின் பெயர்களை எழுதி குலுக்கி போட்டு, சிறுமி மூலம் எடுக்க வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்தனர். இதன்படி, 1வது வார்டுக்கு சுப்புராம், 2வது வார்டுக்கு சுந்தரேசன், 4வது வார்டுக்கு மகாலட்சுமி, 5வது வார்டுக்கு பாரதி, 6வது வார்டுக்கு சுதா, 7வது வார்டுக்கு நடராஜன், 8வது வார்டுக்கு ராமசாமி, 9வது வார்டுக்கு லட்சுமி ஆகியோர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டது. ஆனால், குலுக்கல் முறையை வாபஸ் பெற வேண்டுமென கூறி, கிராம மக்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர் தேர்வுக்கான குலுக்கல் முறை வீரபாண்டி போலீசார் முன்னிலையிலே நடந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...