ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் சிக்கியவர்களை விடுவிக்க லஞ்சம் வாங்கிதாக தொடரப்பட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேரை விடுவித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013- ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கவுதம் சந்த் நிமானி, மகாவீர் சந்த், பாப்பு, உத்தம் சி.ஜெயின் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதாக கூறி மகேந்திரசிங் ரங்கா, நேமிசந்த், ஹிராகுமார் ஆகியோர் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். இதில் 60 லட்சம் ரூபாய் இந்த வழக்கை விசாரித்து வந்த கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டான ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு அவர்கள் வழங்கியதாக கூறப்பட்டது.
இது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், மகேந்திரசிங் ரங்கா, நேமிசந்த், ஹிராகுமார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சம்பத்குமார் உள்ளிட்டோர் எதிராக குற்றப்பத்திரிகை போலீஸார் தாக்கல் செய்தனர்.
2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்பத்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தன்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து முட்கல் கமிட்டியில் முறையிட்டார். மாநில புலனாய்வு பிரிவு விசாரணையைக் கோரினார். அவர்மீது கூறப்பட்ட குற்றச்சட்டை விசாரித்த கமிட்டி அவர்மீதான குற்றச்சாட்டை நீக்கியது.
இதையடுத்து 2018-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. தற்போது அவருடைய பேட்ச்மேட்கள் டிஐஜிக்களாக பதவி உயர்வு பெற்ற நிலையில் சம்பத்குமார் எஸ்.பியாக உள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 81 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு சாட்சியம் அளித்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஒம்பிரகாஷ், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படவில்லை எனவே இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமார் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

No comments:
Post a Comment