நாகமலை புதுக்கோட்டை,
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் மோகன். மளிகை கடை நடத்தி வந்தார். அவருடைய மகன் பொன்ராஜ்(வயது 21). இவர் மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல மையத்தில் எம்.பி.ஏ. படித்து வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
பொன்ராஜின் தந்தை மோகனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மோகன் சிசிக்்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.
தந்தை இறந்த தகவலை மதுரையில் படித்து வந்த மாணவர் பொன்ராஜிக்கு உறவினர்கள் போனில் தெரிவித்துள்ளனர். இதை கேட்டதும் மிகுந்த மனவருத்தம் அடைந்த அவர், யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
தந்தை மீது அதிக பாசம் வைத்திருந்த பொன்ராஜிக்கு அவரின் இழப்பை தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவெடுத்து விடுதி அறையில் பிளேடால் கையை அறுத்துக் கொண்டார். கையில் ரத்தம் வழிந்த நிலையில் பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்ததாக தெரியவருகிறது.
இதற்கிடையே சற்று நேரத்தில் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்ற விடுதி ஊழியர்கள் பொன்ராஜ் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சக மாணவர்களும் சோகம் அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ், நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
பின்னர் பொன்ராஜ் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அண்ணா பல்கலைக்கழக மதுரை மண்டல மையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment