Tuesday, 17 December 2019

இதைவிட இஸ்லாமியர்களுக்கு வேறு துரோகத்தை அ.தி.மு.க. செய்து விட முடியாது: கே.எஸ். அழகிரி சீற்றம்


சென்னை:

இதைவிட இஸ்லாமியர்களுக்கு வேறு துரோகத்தை அ.தி.மு.க. செய்து விட முடியாது என்று குடியுரிமைத் திருத்தச் சட்ட வாக்களிப்பு குறித்து கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மக்களவையில் 303 உறுப்பினர்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பா.ஜ.க. அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டாமல் மதரீதியாக பிளவு அரசியலை நடத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து அறிஞர் பெருமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் களத்தில் இறங்கி, கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தலைநகர் தில்லியில் ஜாமியா இஸ்லாமிய பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழகம், இந்து பனாரஸ் பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி. மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை, புதுச்சேரி, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், லக்னோ, வாரணாசி, கல்கத்தா, கௌஹாத்தி போன்ற நகரங்களில் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு பா.ஜ.க. ஆட்சியைக் கண்டித்து நாடு முழுவதும் போராடி வருகிறார்கள்.

மக்களவையில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இருப்பதால் இச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் மாநிலக் கட்சிகள் அச்சுறுத்தப்பட்டு, ஆதரவு பெறப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் 125, எதிர்ப்பு வாக்குகள் 105. அ.தி.மு.க.வின் 11 வாக்குகளும் எதிர்த்து அளிக்கப்பட்டிருந்தால் சட்டத் திருத்தம் நிறைவேறி இருக்காது. இஸ்லாமியர்களின் உரிமைகளை மறுக்கிற சட்டத் திருத்தத்தை அ.தி.மு.க. ஆதரித்திருப்பதன் மூலம் பா.ஜ.க.வின் ஆணைக்கு கட்டுப்பட்டு செயல்படுகிற கட்சியாக மாறியிருப்பதை உறுதி செய்கிறது. இதைவிட இஸ்லாமியர்களுக்கு எதிரான துரோகம் வேறு எதையும் அ.தி.மு.க. செய்து விட முடியாது.

1955 இல் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டம், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கியது. ஆனால், 2019 இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் மத அடிப்படையில் குடியுரிமை வழங்க முற்படுகிறது. இதைத் தான் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு ஆகியோர் வடிவமைத்துக் கொடுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைத்து சிதைக்கிற முயற்சியாகவே இதை கருத வேண்டியிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை மதரீதியாக சீர்குலைக்கிற பா.ஜ.க.வுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவதன் வெளிப்பாடுகளே தற்போது நடைபெறுகிற எதிர்ப்பு போராட்டங்களாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...