𝑫𝒆𝒔𝒊𝒂𝒌𝒂𝒕𝒉𝒊𝒓 𝑵𝒆𝒘𝒔: 19.12.2019
தேனி மாவட்டம் சமதர்மபுரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் பெத்தணசாமி (80) - சின்னதாய் (வயது75) என்ற தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். அனைவரும் திருமணமான நிலையில், சின்னதாய்க்குக் கண்பார்வை குறைபாடு ஏற்படவே, அருகில் உள்ள மகளின் வீட்டில் வசித்துவருகிறார்.
தனியாக இருக்கும் பெத்தணசாமி, தனது தம்பி மகன் சிவகண்ணமூர்த்தி வீட்டில் தஞ்சமடைந்தார். வீட்டு மாடியில் உள்ள சிறிய அறை பெத்தணசாமிக்குக் கொடுக்கப்பட்டது.
அச்சிறிய அறையில், ஏற்கெனவே சிவகண்ணமூர்த்தியின் உறவுக்காரத் தம்பி கனகவேல் ஐயப்பன் (30) என்பவர் தங்கியுள்ளார். தாய், தந்தையை இழந்து ஆதரவற்று இருந்த கனகவேல் ஐயப்பனை, சிவகண்ணமூர்த்திதான் பாலிடெக்னிக் படிக்கவைக்க வைத்துள்ளார். வேலைக்குச் செல்லாமல் மது, கஞ்சா என அடிமையான கனவேல் ஐயப்பன் அடிக்கடி தனது பெரியப்பா முறை கொண்ட பெத்தணசாமியுடன் சண்டைபோட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த கனவேல் ஐயப்பனை,`தினமும் ஏன் குடிக்கிறாய்?’ எனக் கண்டித்துள்ளார் பெத்தணசாமி. `என்னையே கண்டிக்கிறாராயா?’ எனக் கேள்விகேட்ட கனவேல் ஐயப்பனுக்கும், பெத்தணசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், கோபத்தின் உச்சிக்குச் சென்ற கனவேல் ஐயப்பன், அருகே இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து, பெரியப்பா பெத்தணசாமியின் தலையில் அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் பெத்தணசாமி சரிந்து கீழே விழ, குடிபோதையில் இருந்த கனவேல் ஐயப்பன், பெத்தணசாமியின் அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார்.
காலையில், போதை தெளிந்து எழுந்த கனவேல் ஐயப்பன், ரத்த வெள்ளத்தில் கிடந்த பெத்தணசாமியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, சிவகண்ணமூர்த்தியிடம் கூறியுள்ளார். வீட்டிற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பெத்தணசாமியைச் சோதித்துள்ளனர். அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. குடிபோதையில் செய்த தவறு குறித்து கனகவேல் ஐயப்பன், தேனி காவல்நிலையத்திற்குச் சென்று நடந்த விவரத்தைக் கூறியுள்ளார்.
அதைக் கேட்டு அங்கிருந்த காவலர்கள், ``நீயா கொலை செய்தாய். காமெடி பண்ணாதே…” எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். சிறிது நேரத்தில் மீண்டும் காவல்நிலையம் சென்ற கனகவேல் ஐயப்பன், ``நான் சொல்வதை நம்புங்கள். என் சட்டையில் இருக்கும் ரத்தக்கரையைப் பாருங்கள்…” என அழுத்திக் கூறியுள்ளார். உடனே, காவலர் ஒருவரை கனகவேல் ஐயப்பன் உடன் அனுப்பி, சோதித்துள்ளது தேனி காவல்துறை. விவரம் வெளியே தெரிய, பதறிய காவல் அதிகாரிகள், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்து கனகவேல் ஐயப்பனை கைது செய்தனர். இச்சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment