Tuesday, 17 December 2019

தலையெடுக்கும் கறுப்பு ஆடுகள்: களையெடுப்பாரா எஸ்.பி.,?

பெங்களூரு சென்றிருந்த சித்ரா, ஆம்னி பஸ்சில் கோவை திரும்பினாள். அழைத்துச் செல்ல வந்திருந்த மித்ரா, ''என்னக்கா, திடீருன்னு பெங்களூரு பக்கம் போயிட்டு வந்திருக்கீங்க,'' என, வம்புக்கு இழுத்தாள்.

''சின்னம்மா, மாமியார் வீட்டுல இருக்காங்க. பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு எட்டிப் பார்த்துட்டு வந்தேன். நம்மூரு ஆர்வலரையும் எதேச்சையா பார்த்தேன். அடுத்த வருஷம் அரசியல்ல மிகப்பெரிய மாற்றம் வரும்னு பேசிக்கிட்டாங்க,'' என, பொடி வைத்து பேசினாள் சித்ரா.

அப்போது, மித்ராவின் மொபைல் போனுக்கு, 'சசி' அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது. 'சைலண்ட்' மோடுக்கு மாற்றிய மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன்ல டவுன் பிளானிங் செக் ஷன்ல வேலை பார்த்த 'லேடி' அதிகாரியை இன்ஜினியரிங் செக் ஷனுக்கு மாத்திட்டாங்களாமே...''' என, இழுத்தாள்.

''ஆமாப்பா, உண்மைதான். அந்த பொறுப்புல இருந்தா, சொல்ற பைல்ல கையெழுத்து போடணுமாம். மேலிடத்துல எதிர்பார்க்குறத கொடுத்தாகணுமாம். ஒத்துவராததால மாத்திட்டாங்களாம். இப்ப, இன்ஜி., செக் ஷனே ரெண்டு குரூப்பா செயல்படுது. ஆளுங்கட்சிக்கு நெருக்கமா இருக்குற அதிகாரிக்கு மூணு பொறுப்பு கொடுத்திருக்கிறதுனால, ஒரு குரூப் கொதிப்புல இருக்காம்,'' என்றபடி, ஸ்கூட்டரை 'ஆன்' செய்தாள் சித்ரா.

''அக்கா, எல்.பி.ஏ.,வுல இருந்த அதிகாரி, 'லாங் லீவு'ல போயிட்டாராமே...''

''ஆமாப்பா, ஒரு மாசம்தான் வேலை பார்த்துருப்பாரு. ஆளுங்கட்சி தரப்புல ஏகப்பட்ட 'பிரஷர்' வந்துச்சாம். பொறுப்பு நிரந்தரமா இருக்கணும்னா, 50 'ல'கரம் கொடுக்கணுமாம்; மாசம் தவறாம 'கப்பம்' கட்டணுமாம். தாக்குபிடிக்க முடியாம, அந்த அதிகாரி, 'லீவு'ல போயிட்டாரு. திருப்பூர்காரரை கூடுதல் பொறுப்பா நியமிச்சிருக்காங்க. இருந்தாலும், ஏகப்பட்ட பைல் கையெழுத்தாகாம கெடப்புல இருக்காம். 50 'ல'கரத்துல இருந்து, ஒன் 'சி' வரைக்கும் கொடுத்தா, இந்த பதவி கிடைக்குமாம்,''

''அப்ப, அரசாங்க அலுவலகத்துல எந்த வேலையும் நியாயமா நடக்காதா,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.

''மித்து, துப்புரவு தொழிலாளர் வேலைக்கு கார்ப்பரேஷன்ல ஆள் எடுக்குறாங்கள்ல. அதுல, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கணும்னு, ஒரு குரூப் கோர்ட் படியேறுச்சுல்ல,''

''ஆமா, என்னாச்சு...''

''அவுங்கள கூப்பிட்டு 'சமரசம்' பேசிட்டாங்களாம். 'அப்பாயின்மென்ட் ஆர்டர்' ரெடியாகிட்டு இருக்குதாம். மக்கள் பிரதிநிதிகளுக்கும், சங்கத்துக்காரங்களுக்கும் 'அலாட்மென்ட்' இருக்காம். அதனால, மூணு 'ல'கரத்துல இருந்து, அஞ்சு 'ல'கரம் வரைக்கும் துணிச்சலா கைமாத்துறாங்களாம்,''''துப்புரவு தொழிலாளர்களை நியமிக்கறதுக்கு கூட, லட்சக்கணக்குல வாங்குறாங்களா, கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு,'' என, நொந்து கொண்டாள் மித்ரா.

கோர்ட் வளாகத்தை கடந்து, திருச்சி ரோட்டுக்கு ஸ்கூட்டரை திருப்பிய சித்ரா, ''யு.டி.எஸ்., நிறுவனம் மோசடி செய்த பணத்தை திருப்பிக் கொடுக்கப் போகுதாம். அதனால, 'கிளைம் பார்ம்' கொடுக்குறதுக்கு, கோர்ட்டுக்கு ஏகப்பட்ட பேரு வர்றாங்க. இதுல, கோடிக்கு மேல 'டிபாசிட்' செஞ்சவங்க நிறைய பேரு இருங்காங்களாம்,''

''அப்படியா,'' என்றாள் மித்ரா.

''கொஞ்சம் பொறு மித்து, முழுசா சொல்றேன். 'டிபாசிட்' செஞ்ச தொகையை விட, 'டபுள்' மடங்கு தொகை திருப்பி வாங்குனவங்க, 25 ஆயிரம் பேராம். கிட்டதட்ட, 300 கோடி ரூபாய்க்கு மேல இருக்குமாம். அந்த தொகைய திருப்பி வசூலிக்கப் போறாங்களாம். யார் யாரு அதிகமா பணம் வாங்குனாங்களோ, கோர்ட் மூலமா சம்மன் போகப்போகுதாம். பணத்தை திருப்பிக் கொடுக்காதவங்க மேல கிரிமினல் வழக்கு பதியப் போறாங்களாம்,''

''அதெப்படி, 'டிபாசிட்' செஞ்ச பணத்தை வட்டியோடு வாங்கியிருக்காங்க. எப்படி, திருப்பி வாங்க முடியும்,'' என, நோண்டினாள் மித்ரா.

''அதைப்பத்தி நானும் விசாரிச்சேன். 'டிபாசிட்' செய்யுற தொகைக்கு குறிப்பிட்ட சதவீதமே வட்டி கொடுக்கணும்ங்கிறது, ரிசர்வ் வங்கி விதிமுறையாம். கூடுதலா கொடுத்தாலும் தப்பு; வாங்குறதும் தப்பாம். அந்த விதிமுறையை சுட்டிக்காட்டி, சம்மன் அனுப்ப போறாங்களாம்,'' என்றபடி, ஹைவேஸ் ஆபீசுக்கு பின்புறமுள்ள பாழடைந்த வனத்துறை அலுவலகத்தை மித்ராவுக்கு காட்டினாள் சித்ரா.

''என்னக்கா, பேய் பங்களா மாதிரி இருக்கு,''

''இங்க இருந்த ஆபீசு, மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு மாறிடுச்சு. அதனால, இந்த கட்டடத்தை கண்டுக்காம விட்டுட்டாங்க. இப்ப, சிட்டிக்குள்ள சந்தன மரம் கடத்தல் அடிக்கடி நடக்குது. வடவள்ளி பக்கத்துல மூணு மரத்தை வெட்டி கடத்தியிருக்காங்க.

''பாரதியார் பல்கலை வளாகத்துல ரெண்டு வருஷத்துல, 30க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியிருக்காங்களாம். வடவள்ளி போலீஸ் தரப்புல, சி.எஸ்.ஆர்., மட்டும் பதிவு செஞ்சிருக்காங்களாம். பல்கலை ஊழியர்களுக்கும், கடத்தல் காரங்களுக்கும் தொடர்பு இருக்கும்னு சந்தேகப்படுறாங்க. வனத்துறைக்காரங்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கமா மவுனமா இருக்காங்க,''

''அதெல்லாம் சரி... வடவள்ளி ஏரியாவுல வசிக்கிறவங்கள தடபுடலா கவனிக்கிறாங்களாமே...''

''ஆமாப்பா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஒவ்வொரு வீட்டுக்கும் ரெண்டு கலர்ல குப்பை தொட்டி குடுத்தாங்க. இப்ப, மெகா சைஸ் காலண்டர் கொடுக்குறாங்களாம். கார்ப்பரேஷனுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்குறதுக்குள்ள இன்னும் என்னென்ன குடுக்கப் போறாங்கன்னு தெரியலை,'' என்றபடி, திருச்சி ரோட்டில் நடந்து வரும் பாலம் வேலைகளுக்கு இடையே தட்டுத்தடுமாறி ஸ்கூட்டர் ஓட்டினாள் சித்ரா.

''அக்கா, ஹவுசிங் யூனிட் பிரச்னை அரசியலாகிருச்சு பார்த்தீங்களா,'' என, அடுத்த விஷயத்தை நோண்டினாள் மித்ரா.

''வீட்டை காலி செய்யச் சொல்லி பலமுறை நோட்டீஸ் கொடுத்துட்டாங்க. சொந்த வீடுங்குறதுன்னால பலரும் காலி செய்றதுக்கு தயங்குனாங்க. மேட்டுப்பாளையம் சம்பவத்துக்கு பின்னாடி, ஹவுசிங் போர்டு தரப்புல ரொம்பவே நெருக்கடி கொடுத்தாங்க.

''இதை, ரெண்டு கட்சிக்காரங்களும், 'ட்விஸ்ட்' பண்ணிட்டாங்க. என்ன செய்றதுன்னு தெரியாம, அங்க வசிக்கிறவங்க தவிக்கிறாங்க. ஜன., வரைக்கும் மழை நீடிக்கும்னு வானிலை மையம் சொல்லி இருக்கறதுனால, அதிகாரிங்க ரொம்பவே டென்ஷனா இருக்காங்க,''

சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டை கடந்து, வரதராஜபுரம் நோக்கி பயணித்தனர்.

''நம்மூரிலும் மூணு நம்பர் லாட்டரி விக்குதாமே...''

''என்ன, இப்படி கேட்டுட்ட... இதுக்கு முன்னாடி, தொண்டாமுத்துார், பேரூர் பகுதியில அமோகமா நடந்துச்சு. இப்ப மதுக்கரை, சுந்தராபுரம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம் ஏரியாவுல விற்பனை படுஜோரா நடக்குது. அந்தந்த ஸ்டேஷனுக்கு மாசம் தவறாம கப்பம் கட்டுறாங்களாம்.

''பெரியநாயக்கன் பாளையம் ஸ்டாப்புக்கு பக்கத்துல இருக்குற ஒரு பேக்கரி, ஸ்டேஷன் எதுக்க இருக்கற ஒரு கட்டடம், கொஞ்சம் தள்ளிப்போன இன்னொரு கட்டடம்னு, மூணு இடத்துல மூணு நம்பர் லாட்டரி விற்பனை ஜோரா நடக்குது,''

''இந்த விஷயம் தெரியாம, விழுப்புரத்துல ஒரு குடும்பம் தற்கொலை செஞ்சத கேள்விப்பட்ட எஸ்.பி., நம்மூர்ல இருக்கான்னு விசாரிக்கச் சொல்லியிருக்காரு. போலீஸ்காரங்களும், பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்குறாங்க...''

இதையெல்லாம் கண்டு எஸ்.பி.,க்கு ரிப்போர்ட் போட வேண்டிய கோவை ரூரல் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ்காரங்கள்ல பல பேரு, சட்டவிரோத செயலுக்கு பாதுகாவலர்களாம்.கருமத்தம்பட்டி ஸ்டேஷன்ல எஸ்.பி., -எஸ்.ஐ., நடத்தின கூத்து போல, பல ஸ்டேஷன்ல தனிப்பிரிவு ஆட்களே கட்டப்பஞ்சாயத்து நடத்துறாங்களாம். லாட்டரி, சீட்டாட்டம், டாஸ்மாக் பார் வசூல்லு சக்கபோடு போடுறாங்களாம். பல வருஷமா இதே பிரிவுல குப்பை கொட்ற ஆட்களையும், தப்பு செய்றவங்களையும் எஸ்.பி., களையெடுத்ததா தான், இந்த ஸ்பெஷல் பிராஞ்ச் உருப்படும்,'' என்றபடி, ஹோப் காலேஜ் பகுதியில இருந்த பேக்கரி முன், ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.

அப்போது, காளப்பட்டி பஸ் கடந்து சென்றது. அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, விளாங்குறிச்சி வி.ஏ.ஓ.,வை மேட்டுப்பாளையம் கள்ளிப்பட்டிக்கும், தண்டல்காரரை சின்ன வேடம்பட்டிக்கும் மாத்திட்டாங்களாம். சின்ன வேடம்பட்டியில வேலை பார்த்தவங்கள, விளாங்குறிச்சிக்கு நியமிச்சிருக்காங்க,'' என்றாள்.

''ஓ... அப்படியா... '' என்றபடி, டீ ஆர்டர் செய்த சித்ரா, அவிநாசி ரோடு பளபளன்னு இருப்பதை பார்த்து, ''அந்த எம்.எல்.ஏ.,வுக்கு கமிஷன் கரெக்ட்டா போயிடுதாமே...'' என, நோண்டினாள்.

''ஆமாக்கா, ஹைவேஸ் டிபார்ட்மென்டுல எந்த வேலை செஞ்சாலும், 18 பர்சன்டேஜ் கமிஷனுக்கு ஒதுக்குவாங்களாம். ரெண்டு பிரசன்டேஜ் எம்.எல்.ஏ.,வுக்கு போகுமாம். தொகுதிக்கு உட்பட்ட ஏரியாவுல நடந்த வேலைக்கு, ரூ.16 லட்சம் கைமாறியிருக்காம்,'' என்ற மித்ராவை பார்க்க, கல்லுாரி தோழிகள் வந்திருந்தனர்.

அவர்களுடன் பழைய விஷயங்களை அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...