Thursday, 19 December 2019

` உயிர் பயத்தோடதான் ஒவ்வொரு நாளும்...!' - அரசு கட்டடங்களின் நிலையால் பதறும் ஆனைக்காரன் சத்திரம்𝒚


𝑫𝒆𝒔𝒊𝒂𝒌𝒂𝒕𝒉𝒊𝒓 : 19.12.2019

ஒரே ஊரில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் மற்றும் மக்கள் பயன்படுத்தும் அரசு அலுவலகக் கட்டடங்கள் பலவும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள போதும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உயிரிழப்பிற்குப் பின்புதான் அரசு கவனம் செலுத்துமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி உள்ளது. இங்கே 1957-ம் ஆண்டு கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. நாளொன்றுக்கு சுமார் 500 நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்ளும் இந்த மருத்துவ வளாகத்தில் பிரசவ அறை, கட்டு கட்டும் அறை, கணினி அறை, ஊசி போடும் அறை, மருந்து வழங்கும் அறை, நோயாளிகள் படுக்கை அறை மற்றும் ஆண்-பெண் ஆகியோருக்குத் தனித்தனியான கழிவறை வசதிகள் என யாவும் இருந்தன. இக்கட்டடம் சிதலமடைந்து எந்நேரமும் இடிந்துவிழும் என்ற அபாயம் ஏற்பட்ட பிறகு அதை இழுத்துப் பூட்டி விட்டனர். தற்போது பின்புறமுள்ள ஒரு சிறிய இடத்தில்தான் இந்த நிலையம் பெயருக்கு இயங்கி வருகிறது.

அதுபோல, இந்த ஊராட்சிக்குட்பட்ட துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் உட்புறத்தில் காரைகள் பெயர்ந்து விழுந்து, கம்பிகள் தெரிகின்றன. ஆங்காங்கே விரிசல்களும் ஏற்பட்டு அச்சுறுத்துகின்றன. மாணவர்களும் ஆசிரியர்களும் ஒவ்வொரு நாளையும் உயிர்ப் பயத்தில்தான் கழிக்கின்றனர். `சமீபத்தில் பெய்த பெருமழையில் இக்கட்டடம் விழுந்திடாமல் இருந்தது, ஆச்சர்யம்' என்கின்றனர். .

இதுபற்றி கொள்ளிடத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரபு நம்மிடம் பேசுகையில்,``கல்வி பயிலும் பள்ளிக்கூடம், நோய் தீர்க்கும் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமல்ல. இங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டடமும் சிதலமடைந்தது. இதனால், தற்போது இங்கிருந்து 5 கி.மீ. தூரமுள்ள தைக்கால் என்ற ஊரில் வாடகை கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்றியிருக்கிறார்கள். இங்குள்ள மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற தினமும் அலைய வேண்டியுள்ளது. சார்பதிவாளர் அலுவலகமும் பழைமையடைந்து விரிசல் விட்டு ஆண்டுக்கணக்கில் அச்சுறுத்தி வருகிறது. அங்கு பணிபுரிவோரும் பயந்து கட்டடத்தின் ஆபத்து குறித்து மேலிடத்திற்குப் புகார் தெரிவித்தும் பயனில்லை.

ஏழை மக்கள் தினமும் வரிசையில் நின்று ரேஷன் பொருள்களை வாங்கிச் செல்லும் அங்காடி கட்டடமும் ஆபத்தில்தான் இருக்கிறது. வாழும் பொழுது தேவைப்படும் அரசு கட்டடங்களின் கதி இதுவென்றால் ,மனிதன் இறந்தபிறகு ஈமச்சடங்கு செய்யும் கட்டடமும் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில்தானிருக்கிறது. இப்படி இங்குள்ள அரசு கட்டடங்கள் பலவும் பழுதடைந்து விரிசல்விட்டு, மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வண்ணம் இருப்பது குறித்து பலமுறை உரிய அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

சமீபகாலமாக தமிழகத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால்தான் அந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. ஆனால், எங்கள் பகுதியில் விரிசல்விட்ட இந்தக் கட்டடங்களால் எந்த உயிருக்கும் ஆபத்து ஏற்படும்முன், இவற்றை அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார் ஆதங்கத்துடன்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...