வன்முறையைக் கொண்டு எங்களை அடக்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை சட்டப்படி எதிர்கொள்வோம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸார் 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் 5,000 பேர்தான் பேரணியில் கலந்துகொண்டதாக கூறுகிறார். இதில் யார் சொல்வது உண்மை என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் தவறுகளைச் செய்து வெற்றி பெற்றுவிடலாம் என ஆளும் அதிமுகவினர் நினைக்கின்றனர். அவர்கள் தோல்விகளை வெற்றிகளாக மாற்ற முயன்றால் பின்விளைவுகளை எதிர்கொள்வார்கள். அவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்வோம். நாங்கள் எந்த மாதிரியான ஆயுதங்களை கையில் எடுப்போம் என்பதை நாங்கள் தீர்மானிப்பது அல்ல. எதிரிகள்தான் தீர்மானிக்கின்றனர்.
எல்லா தடைகளையும் தாண்டி திமுக கூட்டணி இத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். குடும்ப அரசியல் குறித்து அதிமுக பேசுவது புளித்துப்போன பிரச்சாரம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரது கட்சி அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் இந்த கொள்ளை கும்பலை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மர்ம நபர்கள் குண்டு வீசித் தாக்கி இருப்பது கண்டனத்துக்குரியது. ஒரு கட்சிக்கு எதிரான வன்முறை சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. தற்போது கர்நாடகாவில் நடந்திருக்கிறது. அடுத்து தமிழகத்தில் நடக்க வாய்ப்பு உள்ளது.
வன்முறையைக் கொண்டு எங்களை அடக்க முடியாது. இந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment