Sunday, 26 January 2020

இந்தியாவை ஆகச்சிறந்த நாடாக உருவாக்க வேண்டும்- சத்குரு



கோவை: ஈஷா யோகா மையத்தில் 71-ம் ஆண்டு குடியரசு தினவிழா இன்று (ஜனவரி 26) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 112 அடி ஆதியோகியை தரிசிக்க செல்லும் நுழைவு வாயிலான மலைவாசல் முன்பு இவ்விழா நடைபெற்றது. இதில் போளூவாம்பட்டி ஊராட்சித் தலைவர் சதானந்தம், ஊராட்சி துணைத் தலைவர் பழனிசாமி மற்றும் போளூவாம்பட்டி வார்டு உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சிறப்பு விருந்தனர்களாக பங்கேற்றனர். விவசாயி துரைசாமி அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில், ஈஷா தன்னார்வலர்கள், நதிகளை மீட்போம் இயக்கத்தினர், ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள், ஆசிரமவாசிகள், சுற்றுப்புற கிராம மக்கள், பழங்குடியின மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே சத்குரு குடியரசு தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘அன்பிற்குரிய நமது நாட்டை, சாதி, மத, இன வேறுபாடுகளிலிருந்து உயர்த்திட நாம் முனைந்திடுவோம். நாம் அனைவரும் பெருமைப்படும் விதத்தில் நாட்டை உருவாக்குவோம். நாடு நமது மூச்சில் இருக்கவேண்டும். தேசம் என்பதை அறுதியானது எனச்சொல்ல முடியாது. ஆனால் தேசம் என்னும் அடையாளம் இல்லாமல், பெருத்த எண்ணிக்கையிலான மக்களை முன்னோக்கி அழைத்துச் செல்வது என்பது இயலாத காரியம். துரதிர்ஷ்டவசமாக, நமது தேசத்தில், சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகாலமாகியும் கிட்டதட்ட 40 கோடி மக்கள் தீவிரமான ஊட்டச்சத்து குறைபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நம் மண்வளம் குன்றி வருகிறது, நீராதாரங்கள் வற்றி வருகின்றன, இவற்றைத் தவிர மனித வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அன்பிற்குரிய நமது நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் இந்த மகத்தான பிரச்சனைகளுக்கு எல்லாம் எழும்பி நின்று தீர்வு ஏற்படுத்த விழைய வேண்டும்.

இளைஞர்கள் என்றால் உயர்ந்த சக்திநிலையில் வாழ்க்கை நடக்கிறது என்று பொருள். இளைஞர்களை நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும், உங்களுடைய சொந்த விதத்தில், நம் தேசம் சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு இன்னல்களுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பாருங்கள். மிகக் கொடூரமான அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட காலத்தை கடந்து வந்திருக்கிறோம். அதிலிருந்து இப்போதுதான் மீண்டு வருகிறோம். அதனால் மீண்டும் தடத்தில் சென்று, மீண்டும் முன்னேற்றப் பாதையிலும், மீண்டும் நம்மை ஒன்றுபடுத்துவதிலும் கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம்.

நாட்டு மக்களாக வாழ முடிவுசெய்திருக்கும் நாம் அனைவருமே இந்த தேசத்தின் குடிமக்கள்தான். நம் தேசத்தை நல்லமுறையில் கட்டமைப்பது நமது கைகளில் உள்ளது. இந்த தலைமுறை மக்களாகிய நாம் இதுவரை கண்டதிலேயே ஆகச்சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசையும் ஆசியும். ஏனெனில், இந்த பூமியில் நமக்கான நேரமிது. இதனை நாம் நிகழச் செய்வோம்’.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...